Friday, November 28, 2008

தனிமை ..



தொலைவில் கடலில் அஸ்தமிக்க செல்லும் சூரியன்

பாலைவனத்தில் பூத்த கள்ளிச்செடி

ஊர் எல்லையில் காவலில் அய்யனார் சிலை

தூரமாய் கடலில் மீன் பிடிக்கச் சென்ற படகு

நதியினில் மிதக்கும் நிலா

வெய்யிலில் திரிந்தும் கருக்காத ஒற்றை மேகம்

தூரத்தை குறிக்கும் மைல் கல்


தனிமையும் அழகோ ?

நிழற்படம் நன்றி : திரு. அனீஷ் B கிருஷ்ணன்

Friday, November 21, 2008

நீர்த்துளி


கடலாய் இருந்து
மலை மேல் மிதந்து
மரம் மேல் விழுந்து
ஓரிடம் விட்டு ஓரிடம்
செல்வதே வாழ்வாய்க்
கொண்ட நீர்த்துளிக்கு ஓர் நாள் சந்தேகம்
தான் தூயவளா தீயவளா என்று ...

தன்னுள் நீந்திய மீனிடம்
தான் மோதிச்சென்று கூழாக்கிய கற்களிடம்
தன்னில் எதிரோளிக்கும் நிலவிடம்
தன்னில் நீராடிய பெண்ணிடம்
இக்கேள்வியை கேட்டது ...

மீன் :
நான் பிறந்தது வளர்ந்தது
விளையாடியது காதலித்தது
பின் ஓர் நாள் இறப்பது
என என் வாழ்வே உன்னில் தான் ..
நீ தூயவள், அதிலென்ன சந்தேகம்?







கூழாங்கல்
:
மலையாய் இருந்த என்னை
ஒவ்வோர் கணமும் மோதி மோதி
கடுகாக்கி மண்ணாகும் நீ
தீயவள் அன்றி வேறென்ன ?






நிலா
:
நான்
வளர்ந்தாலும் தேய்ந்தாலும்
நிழல் போர்த்தி ஓர் நாள் முகம் மறைத்தாலும்
நித்திரைக்கு போகும் முன் உன்னில் தான் என்னை பார்ப்பேன்
தூயவளே !








பெண்:
கரைகளில் நான் களைந்த ஆடையை
குளிக்கையில் திருடிச்சென்று
கலங்க வைத்தாய் என்னை !
போடி! நீ தீயவள்!








சிந்தனை செய்தது நீர்த்துளி ...
தீயவள் தூயவள் என்பது பிறரது விழிகளுக்கே ..
இவ்விரு நிலையும் இல்லாமையே உண்மை ..
உணர்ந்த நொடியில் சட்டென்று மேகமானது நீர்த்துளி ..
இம்முறை மண்ணில் வீழ அல்ல .